Saturday 21st of December 2024 10:15:04 AM GMT

LANGUAGE - TAMIL
-
சுதந்திர வர்த்தக ஊழியர்களின் தொடரும் சோகங்கள்!

சுதந்திர வர்த்தக ஊழியர்களின் தொடரும் சோகங்கள்!


கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தின் ஆடைத் தொழிற்சாலை ஒன்றை சேர்ந்த ஊழியர்கள் நீர்கொழும்பு மாவட்ட தொழில் திணைக்களத்தின் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர். தொழில் உத்தரவாதம் இன்மை, வேலைக்கு வருமாறு அழைப்பு விடுக்காமை, கடந்த மூன்று மாதங்களுக்குரிய ஊதியத்தில் 40 சதவீதம் மட்டுமே வழங்கப்பட்டமை போன்ற விடயங்களை முன்னிறுத்தி அவர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் நூற்றுக்கணக்கான பெண்களும் கலந்துகொண்டனர்.

கொரோனாவுக்கு பின்னரான தற்போதைய சூழலில் இலங்கையின் பொருளாதாரம் பெரிதும் பாதிப்பான ஓர் கட்டத்தினை அடைந்துள்ள நிலையில் அதன் தாக்கத்தினை மிக மோசமாக எதிர்கொண்டுள்ள தொழிற்துறைகளில் சுதந்திர வர்த்தக வலயங்களில் உள்ள ஆடைத் தொழிற்துறையும் முக்கிய இடத்தினை வகிக்கின்றது. இதனால் இங்கு பணியாற்றும் பெரும்பாலான பெண்களின் நிலைமை குறித்து தொழிற்சங்கங்களும், தொழிலாளர்கள் மற்றும் பெண்கள் உரிமைகளுக்காகக் குரல் கொடுப்போரும் பெரிதும் கவலையடைந்துள்ளனர்.

நிறுவனங்களால் முன்னெடுக்கப்படும் சம்பளக் குறைப்பு, ஊழியர்களை காரணமின்றி தொழிற்சாலைகளிலிருந்து விலக்குதல், அழைக்கும் வரை வரவேண்டாம் என்று ஊழியர்களை வீடுகளில் இருக்குமாறு கூறுதல் போன்ற பல காரணங்களினால் அந்த பெண்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியதாக்கியுள்ளது.

இலங்கை முழுவதும் 15 சுதந்திர வர்த்தக வலயங்கள் உள்ளன. இந்த வலயங்களில் பணியாற்றும் ஊழியர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 75 ஆயிரமாகும். இவர்களில் பெரும்பாலானவர்கள் 18- 30 வயதுக்கு இடைப்பட்ட பெண்களாவர். சுதந்திர வர்த்தக வலயங்களில் மொத்தம் 281 ஆடைத் தொழிற்சாலைகள் உள்ளன. இவற்றில் 244 கொரோனாவுக்கு பின் தற்போது இயங்க ஆரம்பித்துள்ள நிலையில் சுமார் 60 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் வேலைக்குத் திரும்பியுள்ளனர். அதாவது மூன்றில் ஒரு பங்கினர் தற்போது இந்த வலயங்களில் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதேபோன்று கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்;தில் மட்டும் 62 தொழிற்சாலைகளின் பணிகள் ஆரம்பமாகியுள்ள போதிலும் 30 சதவீதமான தொழிலாளர்களை பல்வேறு காரணங்களைக் காட்டி பணி நீக்கம் செய்ய அங்குள்ள நிர்வாகங்கள் முயற்சி எடுப்பதாக தொழிற்சங்கங்கள் குற்றம் சுமத்துகின்றன. குறிப்பாக கைக்குழந்தைகள் உள்ள தாய்மார், பலவீனமான உடல் நிலை உள்ள பெண்கள், நிரந்தரமற்ற பெண் தொழிலாளர்கள், ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்வோர் இங்கு பிரதான இலக்காகியுள்ளனர்.

ஒரு வருடத்திற்கு குறைவான மற்றும் 6 மாதங்களுக்கு குறைவான சேவை அனுபவத்தினைக் கொண்டவர்களை வேலைக்கு வருமாறு அழைக்காமை, முழு சம்பளத்தில் ஒரு பகுதியை மட்டும் வழங்குகின்றமை போன்ற முறைப்பாடுகளும் இங்கு அதிகம் பதிவாகியுள்ளன. 5 வருட சேவைக் காலம் முடிய வழங்கப்படும் உபகார நிதியினை (கிரட்டிவிட்டி) வழங்க நேரிடும் என்பதால், 5 வருடங்கள் பூர்த்தியடைய 2 முதல் 3 மாதங்கள் இருக்கும் ஊழியளர்களை பணியிலிருந்து விலக்கி திருப்பி புதிதாக மீண்டும் சேர்த்துக் கொண்டு இந்த உபகார நிதியினை இரத்து செய்தமை குறித்தும் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தொழிற்சங்கங்கள் கூறுகின்றன. அத்துடன் நிதிப் பிரச்சினையைக் காரணம் காட்டி ஊழியர்களுக்கான பகலுணவு விநியோகமும் ஒரு சில நிறுவனங்களினால் நிறுத்தப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் மட்டும்; 10 ஆயிரம் பேர் “மேன்பவர்” என்ற அடிப்படையில் பணியாற்றுபவர்கள். அதாவது இவர்கள் நிரந்தரமாக அன்றி தொழிற்சாலைகளின் தேவைக்கு ஏற்ப நாளாந்தம் ஒவ்வொரு தொழிற்சாலைகளுக்கு சென்று நாள் சம்பளத்தின் அடிப்படையில் வேலை செய்பவர்கள். இவர்களுக்கு நாளாந்தம் ரூ. 900 முதல் ரூ. 1200 வரை சம்பளம் கிடைத்தாலும், நிரந்தர ஊழியர்களுக்கு கிடைக்கும் சலுகைகளோ, நலன்களோ அவர்களுக்கு கிடைப்பதில்லை. இந்த மேன்பவர் வேலைகளை ஒவ்வொரு தொழிற்சாலைகளிலும் பெற்றுத் தரவென முகவர்கள் பலர் உள்ளனர். இந்த முகவர்களை நாடிச் சென்றே வேலைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும். அதற்காக இந்த முகவர்களுக்கு தமது நாள் சம்பளத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை மேன்பவர் அடிப்படையில் வேலை செய்பவர்கள் வழங்கப்பட வேண்டியது கட்டாயமான ஓர் நடைமுறையாக உள்ளது. இந்த மேன்பவர் வேலைகளில் ஈடுபடுபவர்களில் 80 சதவீதமானவர்கள் பெண்களாவர்.

இவர்களும் தற்போது தகுந்த வேலைவாய்ப்பின்றி மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். நிறுவனங்கள் கடந்த மூன்று மாதங்கள் எதிர்கொண்ட பொருளாதார நட்டத்தினைக் காரணம் காட்டி இவர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்க மறுப்பதாகவும் தெரிய வருகின்றது.

கிடைக்காத 5 ஆயிரமும் ரூபாவும் உலர் உணவு நிவாரணங்களும்

நாட்டின் பல்வேறு பாகங்களிலிருந்து வந்து இந்த சுதந்திர வர்த்தக வலயங்களை அண்டிய பகுதிகளில் தங்கியிருந்து வேலை செய்யும் இந்த ஊழியர்களில் குறிப்பாக பெண்களின் நிரந்தர வசிப்பிடம் கட்டுநாயக்க பிரதேசம் அல்லாததன் காரணமாக வருமானம் இழந்தவர்களுக்காக அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட இடர்கால கொடுப்பனவான 5 ஆயிரம் ரூபாவும் கிடைத்திருக்கவில்லை. அத்துடன் இவர்களுக்கு வழங்கவென கருணை உள்ளங்களால் வழங்கப்பட்ட உலர் உணவு நிவாரணப் பொதிகளையும் அப்பிரதேசத்தில் நிரந்தரமாக வகிக்கின்ற பிரதேச வாசிகள் சுதந்திர வர்த்தக வலயத்தில் பணியாற்றுபவர்களுக்கு வழங்க விடாது தாங்களே பெற்றுக் கொண்டுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவ முன்வருபவர்களும் இந்த பிரச்சினையினால் சற்று பின்வாங்கியுள்ளனர்.

சுதந்திர வர்த்தக வலயப் பெண்கள் எதிர்கொள்கின்ற தற்போதைய அவல நிலை குறித்து அப்பெண்களின் உரிமைகளுக்காக நீண்ட காலமாகப் போராடி வரும் தாபிந்து கூட்டமைப்பின் நிகழ்ச்சித் திட்ட அதிகாரியான ஷமிலா துஷாரி கருத்துத் தெரிவிக்கையில், “மார்ச் 20ம் திகதி நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு நாடு முடக்கப்பட்டாலும் சுதந்திர வர்த்தக வலயங்களில் உள்ள ஊழியர்கள் தொடர்ச்சியாக வேலை செய்தனர். நோய் தொடர்பான பாதுகாப்பற்ற நிலைமை காரணமாக தொழிற்சாலைகளை மூடிவிட்டு தங்களை வீட்டுக்கு அனுப்புமாறு அவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். கடைகள் மூடப்பட்டதனால் உணவுப் பொருட்களை வாங்க முடியாமல் சாப்பாட்டுக்கு வழியில்லாமல் அல்லற்படும் நிலைமையையும் அவர்கள் எதிர்நோக்கினர். குறிப்பாக கைக் குழந்தையைத் தூக்கிக் கொண்டு உதவி செய்யுமாறு பல பெண்கள் எங்களை நாடி வந்தனர். இது ஒரு அவல நிலையாகும்”. என்றார்.

இவ்வாறு பல இன்னல்களுக்கு மத்தியில் வேலை செய்த போதும் அந்த மார்ச் மாதத்திற்கான ஊதியமும் ஒரு சில இடங்களில் வழங்கப்படவில்லை என்று சில பெண்கள் வேதனைப்பட்டனர். இதனால் எந்தவிதமான அடிப்படை வசதிகளையும் பூர்த்தி செய்ய முடியாமலும், தற்காலிக தங்குமிடங்களுக்கு (போடிங்) வாடகையை செலுத்த முடியாமலும் அல்லற்படுவதாகவும் அவர்கள் கூறினர். வாடகைப் பணம் செலுத்தப்படாத காரணத்தினால் தங்குமிடங்களிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்டு வீதிகளில் குழந்தைகளுடன் தஞ்சமடையும் நிலையும் சில பெண்களுக்கு ஏற்பட்டுள்ளது. இவர்களின் சோகங்கள் சொல்லில் அடங்காதனவாகும். அத்துடன் வீட்டுவன்முறைகளினால் பாதிக்கப்பட்டு பல பெண்கள் அல்லற்படுகின்றனர்.

கிளிநொச்சியில் அமைந்துள்ள வானவில், விடியல் ஆகிய ஆடைத் தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெரும்பாலான பெண்கள் போருக்கு பின்னர் குடும்பங்களின் தலைமையை ஏற்றுள்ளவர்களாக இருப்பதனால் தற்போதுள்ள பொருளாதார நெருக்கடிகளினால் அவர்களும் பெரும் பாதிப்பினை எதிர்கொள்வதாக தாபிந்து கூட்டமைப்பின் கிளிநொச்சி திட்ட ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீ காந்தி குறிப்பிட்டார். சுமார் 2 ஆயிரம் பேர் விடியல் ஆடைத் தொழிற்சாலையிலும், 2800 பேர் வானவில் ஆடைத் தொழிற்சாலையிலும் வேலை செய்கின்றனர். முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முழங்காவில், பளை, தருமபுரம் ஆகிய பகுதிகளில் இருந்து பெண்கள் இங்கு வேலை செய்ய வருகின்றனர். இவர்களின் அடிப்படை சம்பளம் 19 ஆயிரமாக உள்ள நிலையில் இப்பெண்களும் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர்.

பாலியல் சுரண்டல்களும், பொருளாதார ஒடுக்குமுறைகளும்

வறுமை, கல்வியறிவு குறைவு, குடும்பச் சூழல் காரணமாக பெண்கள் சுதந்திர வர்த்தக வலயங்களில் உள்ள ஆடைத் தொழிற்சாலைகளுக்கு வேலைக்கு வருகின்றனர். இங்கு வேலை செய்யும் பெண்களின் குடும்ப வாழ்வாதாரம் என்பது இவர்கள் செய்யும் இந்த வேலையை நம்பியே இருக்கின்றது. மதுவுக்கு அடிமையாகிய கணவனால் எதிர்கொள்ளும் குடும்பச் சூழலை சமாளிக்கவும், மற்றும் இதர குடும்பப் பொறுப்புகளை சுமக்கவும், தமது வாழ்க்கைத் தர மேம்பாட்டிற்காகவும் இந்த பெண்கள் இங்கு தொடர்ச்சியாக எந்தவிதமான அடிப்படை தொழில் உரிமைகளும் இன்றி தமது கடின உழைப்பை வழங்கி வருகின்றனர். நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்து சுதந்திர வர்த்தக வலயங்களை அண்டிய பகுதிகளில் தற்காலிக வசிப்பிடங்களில் தங்கியிருந்து இவர்கள் வேலை செய்கின்றனர். இதனால் பாலியல் ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் இவர்களின் உழைப்பை சுரண்டவும், ஒடுக்கவும் பல்வேறு தரப்பினரும் இங்கு உள்ளனர். 18 வயதுக்கு மேற்பட்டவர்களே இங்கு வேலை செய்ய முடியமாயினும், 16 வயதிலேயே வந்து இங்கு தமது வாழ்க்கையைத் தொலைத்தவர்களும் உள்ளனர்.

ஆடைத் தொழிற்சாலைகளில் பல மணித்தியாலங்கள் கால்கள் கடுக்க நின்று வேலை செய்யும் இவர்களுக்கான தொழில் உரிமைகள், சலுகைகள் என்பன மறுக்கப்பட்ட நிலையில் உள்ள அதவேளை இப்; பெண்கள் குறித்து சமூகத்தின் பார்வை என்பது மிகவும் வேறுப்பட்டதாகவே உள்ளது.

சுமார் 20 வருடங்களுக்கு முன்பு சிங்களப் பத்திரிகைகளில் பிரசுரமாகிய மணமகள் தேவை விளம்பரங்களை ஆராய்ந்து பார்த்தால் அவற்றில் ‘சுதந்திர வர்த்தக வலய ஆடைத் தொழிற்சாலைகளில் வேலை செய்யும் பெண்கள் தயவு செய்து விண்ணப்பிக்க வேண்டாம்’ என்று நிச்சயம் ஒரு வரி இருக்கும். அந்தளவுக்கு அங்கு வேலை செய்யும் பெண்கள் சமூகத்தினால் மதிக்கப்படாதவர்களாகவும், ஒடுக்கப்பட்டவர்களாகவும் உள்ளனர். சமூகத்தில் இப்பெண்களின் ஒழுக்கம் பற்றி எப்பொழுதும் விமர்சன ரீதியிலான பார்வையே உள்ளது. இந்த நிலைமையை மாற்றி அந்த பெண்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்தவோ அவர்களுக்கான நிலையான திட்டங்களை வடிவiமைத்து அமுல்படுத்தவோ இவ்வளவு காலமும் பதவியில் இருந்த எந்தவொரு அரசாங்கமும் அக்கறைக் காட்டவில்லை.

இந்த வேலையை நம்பி தமது வாழ்க்கையை வடிவமைத்துக் கொண்ட பெண்கள் தற்போதைய கொரோனா நெருக்கடியில் ஏற்படும் பல்வேறு பாதிப்புகளை மிக மோசமாக எதிர்கொண்டுள்ள நிலையில் இவர்களுக்கென நிவாரணங்களை வழங்கவோ, தொழில் ரீதியிலான உத்தரவாதத்தினைப் பெற்றுக் கொடுக்கவோ அரசாங்கம் எந்;த முயற்சிகளையும் எடுக்காமல் உள்ளது கவலைக்குரிய விடயமாகும்.

இங்கு பணி புரியும் பெண்கள் பல ஆண்டுகள் வேலை அனுபவத்தினைப் பெற்றிருந்தாலும் பெரும்பாலானவர்கள் ஒரு முழு ஆடையை வெட்டித் தைக்கும் திறமை அற்றவர்களாகவே உள்ளனர். பகுதியளவில் ஒரு ஆடையின் கொலரையோ, கைகளையோ தைப்பதில் மட்டுமே அவர்;கள் தங்கள் ஆற்றலை வெளிப்படுத்துகின்றனர். இந்நிலையில் இப்பெண்களுக்கு ஆடைகளைத் தைப்பதில் தையல் பயிற்சி அளித்து அவர்களும் ஒரு தொழிற்துறையைக் கற்றுக் கொடுக்க வாய்ப்பளிக்க முன்வருவது அவசியம். இதனால் அவர்களால் ஒரு சொந்த தொழிலை ஆரம்பித்து நடத்த முடியும். இவர்களுக்காக குரல் கொடுக்கும் ஷமிலா, ஸ்ரீகாந்தி போன்றவர்களும் இந்த விடயத்தினையே பொதுவாக சுட்டிக் காட்டுகின்;றனர். பிரச்சினைகளை சுமந்துக் கொண்டு கண்ணீருடன் வரும் இந்த பெண்களின் வேதனைகளை இந்த சமூகம் உணர வேண்டும். இலங்கையின் பொருளாதாரத்திற்கு வலுவூட்டும் இப்பெண்களின் அர்ப்பணிப்புகளை அரசாங்கம் உணர்ந்து அவர்களுக்கு உதவ முன்வர வேண்டும்.

- பிரியதர்ஷினி சிவராஜா


Category: பெண்கள் & குழந்தைகள், சிறப்பு கட்டுரை
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE